Monday, August 31, 2009

மோதி விளையாடு - Part 2

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு,ஆவடி இந்து கல்லூரியில் போட்டி என்று அறிவிப்பு வெளியான தினத்திலிருந்தே எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது.இந்த முறையாவது வெற்றி பெற்றே ஆக‌ வேண்டும் என்று மனதில் முடிவு செய்துகொண்டு,கணினியிலிருந்து 'ஒவ்வொரு பூக்களுமே" பாட்டை திரும்ப திரும்ப‌ ஒலிக்க விட்டேன். ராஜன் "தான் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து" விலகிக்கொள்வதாகவும்,பீரவீனை புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் வற்புறுத்தினார்.காரணம்,சென்ற வாரங்களில் கிடைத்த கசப்பான தோல்விகள்.பீரவீனும் அரை மனதுடன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்.தொடர் தோல்விக்குக் காரணம் அணிதலைவர் அல்ல, அணியின் திறமையின்மையே என்று அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது.சனிக்கிழமை வலைப்பயிற்சியை சிறப்புடன் மேற்கொள்வதன் மூலம் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என்று முடிவானது.ஆனால் வலைப்பயிற்சியில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றத்தை எங்களால் உணரமுடியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை நான்கு மணிக்கே தூக்கத்தில் இருந்து எழுந்துகொண்டேன்.அறையில் விளக்கை எரியவிட்டுக்கொண்டு மட்டையை எடுத்து பயிற்சி செய்துகொண்டிருந்தேன்.அறை நண்பர் எரிச்சல் அடைந்து விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் தூக்கத்தின் கரங்களில் சிக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தார்.நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாலாவது எனக்காக அவர் தன் தூக்கத்தை தியாகம் செய்திருப்பார் :).

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6:30 மணிக்கு ஆவடி கிளம்பவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தோம்.அதன்படி நான் 5:50 மணிக்கெல்லாம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டேன்.அன்று முகூர்த தினம் என்பதால் குழந்தைகளும்,பெண்களும் அழகான உடைகளை அணிந்துகொண்டு என்னைவிட உற்சாகமாகவும்,வேகமாகவும் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

அணியினர் அனைவரும் திட்டமிட்டபடி 7:30 மணிக்கெல்லாம் இந்து கல்லூரியை அடைந்தோம்.அப்போது வேகமாக வந்து நின்ற வேனில் இருந்து இறங்கிய மற்றொரு அணியினர் அனைவரும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினர்.அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் முறையிலிருந்தே அவர்கள் வலுவான அணி என்று மனதில் முடிவுகட்டிக்கொண்டேன்.அவர்களிடம் சென்று விசாரித்ததிலிருந்து , அவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள வந்திருப்பதாகவும், எங்களுடன் விளையாட வேண்டிய அணி இன்னும் வரவில்லை என்றும் கூறி, என் நெஞ்சில் பால் வார்த்தனர்.எங்களுடன் விளையாட இருக்கும் அணியினர் இப்போழுது மைதானத்தை அடைந்துவிட்டனர்.அவர்கள் அனைவரும் வேறு வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்றும் தங்களுக்குள் அணி உருவாக்கி விளையாடி வருவதாகவும் தெரிவித்தனர்.

டாசில் வெற்றிபெற்ற எதிரணித் தலைவர் எங்களை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இது எங்களுக்கு வருத்தத்தையோ,மகிழச்சியையோ தரவில்லை. காரணம், சென்ற போட்டிகள் அனைத்திலும் முதலில் பேட்டிங் செய்தும் தோல்வி அடைந்துள்ளோம், பவுலிங் செய்தும் தோல்வி அடைந்துள்ளோம்.பீரவீனும்,மகேந்திரனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.எதிர்பாராதவிதமாக சந்தித்த பந்துகள் பல நான்காக மாற்றப்பட்டது.அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக வந்துகொண்டிருந்தது.இன்று எப்படியும் ஸ்கோர் 230 க்குமேல் செல்லும் என்று சுரேஷ் கூறிக்கொண்டிருக்கும் போதே பீரவீன் திடீர் என்று பாயின்டில் கேட்ச் பிடிக்கப்பட்டு பெவிலியன் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஒன்டவுன் என்ற முக்கியமான இடத்தில் இப்போது ராஜன் களமிறங்கினார்.சொல்லிச்சென்றபடியே அருமையாக விளையாடிக்கொண்டிருந்தார்.சிக்சர் அடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து பவுன்ட‌ரி லைனில் கேட்ச் பிடிக்கப்பட்டார்.இப்பொழுது எங்கள் அணியின் ஸ்கோர் 92.இன்னும் 17 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் களமிறங்கிய சுனில்,கார்த்திக்,ராஜகோபால் ஆகியோர் ரன் எதும் எடுக்காமலும்,சொற்ப ரன்கள் எடுத்தும் விக்கட்டை இழந்து,இந்திய வீரர்களைப் போன்றே கவலை தோய்ந்த(?) முகத்துடன் பெவிலியன் திரும்பினர்.கார்த்தியின் பொறுப்பற்ற ஆட்டத்தைக் குறை கூறித் திட்டிக்கொண்டே மனதில் குல‌தெய்வத்தை நினைத்துக்கொண்டு , மிகுந்த தைரியத்துடன் களமிறங்கினேன்.

இப்பொழுது நானும் விஜயனும் களத்தில் இருக்கிறோம்.
விஜயனிடம் சென்று எனது பதட்டத்தையும் , இன்னும் 12 ஓவர்கள் இருப்பதையும் கூறினேன்.நிதானமாக ஆடி அனைத்து ஓவர்களையும் முழுமையாக விளையாட வேண்டிய கட்டாயத்தை அவரிடம் தெரிவித்துவிட்டு , முதல் பந்தை சந்திக்க தயாரானேன்.முதல் பந்தை கண்களை அகல விரித்து, , விழிப்புடன் தடுத்தாட முயன்றேன்.ஸ்டெம்பின் மீதுள்ள காதலால் பந்து பைல்ஷ்யை முத்தமிட்டு சென்றது.மனதில் வெறுப்பு ஊற்றெடுத்து உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது.மூன்று மாத வலைப்பயிற்சி,நேரம்,பணம் அனைத்தும் விர‌யமாகிவிட்டது போல் உணர்ந்தேன்.கார்த்திக் என்னை பார்வையால் சூரியனை விட அதிகமாக எரித்துக்கொண்டிருந்தார்.பெவிலியன் திரும்பி சுயநினைவிற்கு வருவதற்குள் எங்கள் அணி அனைத்து விக்கட்டையும் இழந்தது.எதிரணிக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்தோம்.இதை இலக்கு என்று சொல்வது எனக்கு சற்று மிகையாகவே தோன்றுகிறது.சொற்ப ரன்கள் என்றே வைத்துக்கொள்வோம்.


அணியினர் அனைவரின் மனதிலும் வெற்றிடம் தோன்றி,உற்சாகம் இழந்திருந்தோம். முப்பது ஓவர் வீசி 115 ரன்களுக்குள் எதிரணியினரை சுருட்டுவது என்பது இயலாத காரியம்தானே.
முதல் ஓவரை சந்தோஷ் வீசவேண்டும் என்றும்,இரண்டாவது ஓவரை வீச யாரை அழைக்கலாம் ? என்றும் அணித்தலைவர் எங்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தார்.நான் சுரேஷின் மீது நம்பிக்கை வைத்து, அவரை பரிந்துரைத்தேன்.பீரவீன் அதை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்தது.காரணம் கடந்த நான்கு போட்டிகளின் போதும் சுரேஷ் வீசிய அகலபந்துகளின் எண்ணிக்கை சற்றே அகலம்,சாரி சற்றே அதிகம்.இருந்தும் சுரேஷின் இன் சுவிங் டெலிவரியின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக இரண்டாவது ஓவரை அவர்தான் வீச வேண்டும் என்று முடிவானது.


முதல் ஓவரை இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டத்தை அருமையாகத் தொடங்கிவைத்தார்.இப்போது சுரேஷின் ஓவர். தொடர்ந்து நான்கு அகலபந்து மற்றும் நான்கு ரன்களை கொடுத்து ஒரு வழியாக ஓவரை முடித்தார்.பீரவின் மற்றும் ராஜனின் கடுமையான கோபத்தை சம்பாதித்துக் கொடுத்ததுதான் சுரேஷ் செய்த நல்ல காரியம்.இரண்டு ஓவர் முடிந்த நிலையில் எதிர் அணியினர் ஸ்கோர் 15 ஆக இருந்தது.தொடர்ந்து நானும்,கார்த்திக்கும் அருமையாக பந்து வீசி எங்களின் ஸ்பெல்லை நிறைவு செய்திருந்தோம்.தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டிவந்த பெருமை கார்த்திக்கையே சேரும்.
அடுத்து வந்த அப்துல் மற்றும் மகேந்திரன் தங்களது முழுத்திறமையையும் பயன்படுத்தி எதிரணியினரை திணறடித்துக் கொண்டிருந்தனர்.உச்சி வெயில் சூரியன் வேறு தன் கோபக் கண்களால் என்னை திணறடித்துக் கொண்டிருந்தான்.


தண்ணீர் இடைவேளை வந்தபோதுதான் எனக்கு தெரியவந்தது :எதிரணியினர் 52 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர் என்றும்,இன்னும் வெற்றிக்கு தேவையான 64 ரன்களை அடுத்து வரும் 15 ஓவர்களில் எடுக்கவேண்டும் என்றும்.இது எனக்கு சற்றே தெம்பை அளித்தது. காரணம் 15 ஓவர்களில் 64 ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம்.ஆனால் 8 விக்க‌ட்டையும் வீழ்த்துவது என்பது சற்றே முடியக்கூடிய‌ காரியம்.
அணியினர் அனைவரும் ஒன்று கூடினோம்.ஃபீல்டிங் முறையை மாற்றி அமைப்பது என்று முடிவானது.பதினாறாவது ஓவரின் மூண்றாவது பந்தில் சந்தோஷ் ஓரு விக்க‌ட்டை வீழ்த்தி என் நம்பிக்கையை மேலும் அதிகரித்தார்.ரன் அவுட் என்ற முறையில் பீரவீன் மேலும் இரண்டு விக்க‌ட்டை வீழ்த்தினார்.

 இன்னும் 5 விக்க‌ட்டுகளே உள்ளன வெற்றிக்கு.இப்பொழுது களத்தில் இருக்கும் எதிரணி வீரர்கள் ஜோடி சேர்ந்து கணிசமாக ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தனர்.இது சற்றே பதற்றத்தை ஏற்படுத்தியது.இந்த ஜோடியை உடைக்கும் பொறுப்பை பீரவீன் என்னிடம் கொடுத்தார்.அந்த ஓவரில் இரண்டு விக்க‌ட்டை வீழ்த்தினேன்.இபோதுதான் பீரவீனின் முகத்தில் நம்பிக்கை ரேகைகள் தெளிவாகத் தெரிந்தது.அந்த ரேகைகளில்,வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது என்பது எங்களுக்கும் தெரிந்து,அணியினர் அனைவரும் வெறியுடன் விளையாடத் தொடங்கினோம்.


தொடர்ந்து வந்த ஓவரை வீசிய கார்த்திக் மேலும் இரண்டு விக்க‌ட்டை வீழ்த்தி அசத்தினார்.இப்போது 30 வது ஓவரை வீச மகேந்திரன் அழைக்கப்பட்டார்.ஆறு பந்துகளில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எதிரணி நண்பர்கள் விளையாடத் தயாராயினர். சொற்ப ரன்களாக தெரிந்த ஸ்கோர், இப்பொழுது இலக்காக மாறியிருந்தது என்பது எதிரணி ஆட்டக்காரர்களின் பதட்டத்தின் மூலம் நன்றாக தெரிந்தது.
முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களே எடுத்தனர்.மூன்றாவது பந்தை படு நேர்த்தியாக வீசினார் மகேந்திரன்.அது ஆட்டக்காரரை ஏமாற்றி பைல்சை பறித்தது.இதோ நாங்கள் எதிர்பார்திராத வெற்றி எங்களுக்கு சாத்தியமானது.அணியினர் அனைவரும் உற்சாகத்தில் மிதந்துகொண்டிருக்கிறோம்.


தொடர் தோல்விகளுக்குப் பின் கிடைத்த இந்த வெற்றி எனக்கு மன நிறைவைத் தந்தது.வெற்றிக்களிப்பில் அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன்.அம்மா "ஊரில் நல்ல மழை பெய்துகொண்டிருப்பதாகவும் ,வெம்மை குறைந்து ஊரே குளிர்ச்சி அடைந்து விட்டதாகவும் " தெரிவித்துக்கொண்டிருந்தார்.சிறுவர்கள் ஆடிப் பாடும் சத்தமும் தொலைபேசியின் வழியே கேட்டது.என் மனதிலும் மழை பெய்யாமலேயே,குளிர்ச்சி வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதை எப்படி தெரிவிப்பது என் அம்மாவிடம் ?

1 comment:

Mohan said...

இந்தப் பதிவை படிக்கறப்போ 'கிரிக்கெட்' மேட்சையே நேர்ல பார்த்த‌ மாதிரி இருந்தது.மோதி விளையாடு - Part-3 க்காக காத்துக்கிட்டு இருக்கேன்.

Post a Comment