Tuesday, September 8, 2009

அலுமினியப் பாத்திரம்

மரங்களும்,கட்டிடங்களும் பினோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.நான் அமர்ந்து இருக்கும் இருக்கை மூன்று பேர் அமரக்கூடியது.ச(ஜ)ன்னலின் ஓரத்தில் எனக்கு பரிட்சயம் இல்லாத வயதான பாட்டியும்,நடுவில் அம்மாவும்,அம்மாவிற்க்கு அருகில் நானும் அமர்ந்து இருக்கிறேன்.ச‌(ஜ)ன்னலின் வழியே வேடிக்கை பார்க்க முயன்று கொண்டிருக்கிறேன்.அம்மா குனிந்து உட்காருமாரு என்னை வற்புறுத்திக் கொண்டிருக்கிறாள்.ச‌(ஜ)ன்னல் ஓர இருக்கை கிடைக்காததில் மிகுந்த வருத்தத்துடனே என் பயணம் தொடங்கியது.

அம்மா நடத்துனரிடம் டிக்கேட் கேட்கிறாள்.எனக்கும் முழு டிக்கேட் எடுத்தே ஆகவேண்டும் என்று நடத்துனர் விவதித்துக்கொண்டிருக்கிறார்.நீ
ண்ட விவாதத்திற்க்குப் பிறகு அம்மா எனக்கும் முழு டிக்கேட் வாங்கினாள்.இது எனக்கு பெருமையை ஏற்ப்படித்தியது.அன்று தான் முதன் முதலில் அரை டிக்கேட்டாக இருந்த நான் முழு  டிக்கேட்டாக மாறிய தினம்..டிக்கேட்டை வாங்கி பத்திரமாக மேல் சட்டையில் வைத்துக்கொண்டேன்.
கோடை விடுமுறைக்காக அம்மா என்னை எங்கள் கிராமத்தி்ற்க்கு அழைத்துக்கொண்டு போகிறாள். அந்த வயதில் பெரும்பாலான என் விடுமுறை நாட்கள் அனைத்தும் அந்த சிறிய கிராமத்தில்தான் செலவழிக்கப்படும். எங்கள் கிராமத்திற்க்கு நேரடியான  பேருந்து வசதி கிடையாது. அதனால் ஒரு விலக்கில் ( பிரிவு ) இறங்கி அங்கிருந்து மற்றொரு பேருந்தில் செல்ல  வேண்டும். பேருந்து இப்போது காட்டுப்பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அப்போது ஒரு வகையான வாசம் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அது உளுந்து வாடையைப்  போல் இருந்தது. அது பற்றி அம்மாவிடம்  கேட்ட போது பாம்புகள் அதிகம் வசிக்கும் இடமாக இருந்தால் இவ்வாறு வாசம் வரும் என்று கூறினாள்.

நாங்கள் விலக்கில் வந்து இறங்கினோம். அங்கிருந்து பார்க்கும் போதே எங்கள் கிராமத்தின் அழகான மலையும்,மலையின் மீதுள்ள கோவில் கோபுரமும் நன்றாக தெரிந்தது.அம்மா கோபுரம் இருக்கும் திசை நோக்கி வணங்கிகொண்டே என்னையும் வணங்குமாரு வற்புறுத்தினாள். ஏற்கனவே பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தவர்களில் அம்மாவின் தோழிகள் சிலரும் இருந்தனர். அவர்களின் குழந்தைகள் பற்றியும்,குடும்ப நலன் பற்றியும் அம்மா விசாரித்து கொண்டிருந்தாள். நாங்கள் நின்று கொண்டிருக்கும் இடம்  இரண்டு சாலைகளை இணைக்கும் இடம்.  அந்த இடத்தை சுற்றிலும் வயல்கள். வயல்கள் முழுவதும் அறுவடை செய்யப்பட்டிருந்தது. வயலின் மேற்பரப்பு வேடித்து  சிறு சிறு துண்டாக இருந்தது. வரப்புகளில் இருந்த‌ புல்கள் பச்சை நிறத்தை  இழந்து,சாம்பல் நிற வேடம் அணிந்திருந்தது. சாலையின் இரு மருங்கிளும் வரிசையான புளியமரங்களும்,அதன் அருகில் ஓடை ஒன்ரும் இருந்தது. ஓடையில் தண்ணீர் ஓட  வில்லை. தாகத்துடன் என்னை முறைப்பது போல் இருந்தது. ஓவ்வொரு புளியமரத்தின் நடுவிலும் கருப்பு வர்ணம் அடித்து அதில் வெள்ளை நிறத்தில் எண்கள் வரிசையாக எழுதப்பட்டிருந்தது. அந்த எண்கள் எந்த ஊரின் மரத்தில் ஆரம்பித்து எந்த ஊரின் மரத்தில் முடியும் என்று நினைத்து பார்க்க பார்க்க மலைப்பாக இருந்தது.

கிராமத்திற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிட்டன. அம்மா இப்போது என்னை விட்டுவிட்டு ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறாள். அம்மாச்சி வீட்டிற்க்கு தேவையான அரிசி,பருப்பு,கோழி முட்டைகள்,புளியம் பழங்கள் அனைத்தும் அம்மாவிற்க்கு கொடுத்து அனுப்பினாள். அம்மாவின் பிரிவு வருத்தம் அளித்தாலும், அம்மாச்சியின் அரவனைப்பு அதை மறக்க செய்து கொண்டிருந்தது.


எங்கள் வீட்டின் அருகிலேயே எனக்கு மூன்று கூட்டாளிகள் (  நண்பர்கள் ) இருந்தனர். விடுமுறை நாட்களின் பெரும்பாலான பகல் பொழுதும்,மாலை பொழுதும் அவர்களுடனே கழிந்து கொண்டிருந்தது. கூட்டாளிகளில் ஒருவன் மிகவும் வினோதமானவன். என்னை விட இரண்டு வயது பெரியவன்.எப்போதும் காடு,மலை,ஏரி என்று அழைந்து கொண்டிருப்பான்.
பனை மரங்களில் ஏறி நொங்கு பறித்துக்கொடுப்பான் .கையில் எப்பொழுதும் அரிவாளுடன் சுற்றிக் கொண்டிருப்பான் . கிணற்றின் மேலிருந்து குதித்து நீரில் மூழ்கி தரையைத் தொட்டு மண்னை எடுத்து வந்து ஆச்சர்யப் படுத்துவான். தூண்டில் போட்டு மீன் பிடிப்பான்.ஓணானை பி்டித்து மூக்குப்பொடி போட்டு கிருகிருக்க வைப்பான்.உண்டிவில்லால் எதையும் குறி பார்த்து அடிப்பான்.


அய்யாவிற்க்கு அவர்களுடன் சேர்ந்து நான் ஊர் சுற்றுவது பிடிக்கவில்லை.எப்பொதும் என்னை திட்டிக்கொண்டே இருப்பார். ' ஊரில் அடிக்கும் வெயில் எல்லாம் உன் தலையில் தான் விழுகிறது ' என்று கதவை மூடி மதியான வேளைகளில் வலுக்கட்டாயமாக உறங்கவைப்பார்.மாலை வேலையில் நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ' கூட்டாஞ்சோறு ' ஆக்கி யாருக்கும் தெரியாமல் திண்றதை  என்னிடம் தெரிவித்தான். கூட்டாஞ்சோறு என்பது வீட்டிற்க்கு தெரிந்தோ  ( அ ) தெரியாமலோ நண்பர்களுடன் சேர்ந்து விருப்பியதை சமைத்து சாப்பிடுவது.
' எனக்கும் கூட்டாஞ்சோறு சாப்பிடவேண்டும்  ' என்ற ஆசை எழுந்தது.அதை கூட்டாளியிடம் தெரிவித்தேன்,அவர்களும் அதற்க்கு சம்மதித்தனர். ஆனால் சமைப்பதற்கு தேவையான பாத்திரமும்,தேவையான பொருட்கள் வாங்க காசும்  நான் தான் கொண்டுவர வேண்டும் என்று முடிவானது. அய்யாவிடம் சென்று சம்மதம் வாங்கி கூட்டாஞ்சோறு கணவை நினைவாக்கிக் கொள்வது என்பது முடியாத காரியம். நண்பர்களிடம் வேறு சம்மதம் தெரிவித்தாகிவிட்டது.எனக்கு தெரிந்த ஓரே வழி அய்யாவிற்கு தெரியாமல் பணத்தையும்,பாத்திரத்தையும் ஏற்பாடு செய்வது.


அதற்க்கான தருணத்திற்க்காக காத்துக் கொண்டிருந்தேன். அன்று மதிய உணவிற்குப் பிறகு அய்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அம்மாச்சியும் சந்தைக்கு சென்றுவிட்டார். இதுவே சரியான நேரம் என்று முடிவிடுத்தேன்.எப்போதும் அய்யாவின் இடுப்பில் இருக்கும் அந்த பர்ஷ் வைத்த பச்சை நிற பெல்ட் அன்று தலைமாட்டில் இருந்தது. தேவையான பணத்தை அதிலிருந்து எடுத்துக்கொண்டேன். அடுப்படிக்குச் சென்று பார்த்த போது என் கண்ணில் விழுந்த முதல் பொருள் அந்த  ' அலுமினியப் பாத்திரம் '  அதையும் சாக்கில் வைத்து எடுத்துக்கொண்டு பூனை போல வீட்டிலிருந்து வெளியேறினேன்.

வீட்டிலிந்து தெருமுனையை கடக்கும் வரை எனக்கு இருந்த பதற்றத்தில் கண்ணும் காதும் சற்று நேரம் தனது பணியை நிறுத்தி இருந்தது. கூட்டாளிகளிடம் அதைக் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்க்கு வந்து யாருக்கும் தெரியாமல் படுத்துக்கொண்டேன். அம்மாச்சியும் இப்போது சந்தையில் இருந்து வந்துவிட்டாள். வாங்கி வந்த மீனை சமைப்பதற்க்காக இப்போது அந்த அலுமினியப் பாத்திரத்தை தேடிக் கொண்டிருக்கிறாள். எனக்கு பயத்தில் சிறுநீர் கழிக்காவேண்டும் போல் இருக்கிறது. சற்று நேரம் அதை தேடிவிட்டு வேறு பாத்திரத்தில் சமைக்க தொடங்கினாள்.


மறுநாள் காலை திட்டமிட்டபடி கூட்டாஞ்சோறு சமைப்பதற்க்காக தயாரானோம். நண்பர்களில் ஒருவன் எங்களை மலையின் ஒரு பகுதியில் இருந்த காட்டுப் பகுதியில் காத்திருக்க வைத்துவிட்டு சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுவிட்டான். நேரம் கழிந்து கொண்டே போகிறது , பொருட்களை வாங்க சென்ற கூட்டாளி இன்னும் வரவில்லை. பதற்றமும் உற்ச்சாகமும் அதிகரித்தக் கொண்டிருந்த நிலையில் நண்பன் பொருட்களுடன் வந்துவிட்டான். அவன் கையில் மூன்று பொட்டலங்களும்,நெய்யும்,தீப்பெ
ட்டியும் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது ஒன்றில் அரிசியும்,ஒன்றில் வெள்ளக்கட்டியும்,ஒன்றில் பொட்டுக்கடலையும் இருந்தது. இதை வைத்து என்ன செய்ய போகிறாய் ? என்று கேட்டபோது சர்க்கரை பொங்கலும்,கடலை உருண்டையும் என்று கூறிக்கொண்டே அதற்க்கான காரியத்தில் ஈடுபட தொடங்கினான். மலை அடிவாரத்திலேயே நன்நீர் குளம் இருந்ததால் தேவையான தண்னணீரை அதிலிருந்து எடுத்துக்கொண்டோம்.


மூன்று கற்களை வைத்து,அதன் மேல் பாத்திரத்தை வைத்து , சுள்ளிகளை பொறுக்கி உள்ளே திணித்து நெருப்பு மூட்டி அவன் தயார் செய்து கொண்டிருந்த விதம் அச்சர்யத்தை அளித்தது. இபோது எனக்கிருந்த கவலை கிண்டு வதற்க்கு தேவையான கரண்டியை எடுத்துவர மறந்துவிடேன் என்பது. நண்பன் அதைபற்றி கவலை ஏதும் இன்றி மரக்கிளையை ஒடித்து அதை கரண்டி போல் பயன்படுத்த தொடங்கினான். சர்க்காரை பொங்கல் தயாராகிவிட்டது . இன்னும் செய்ய வேண்டியது கடலை உருண்டை மட்டுமே. அதை தயார் செய்யும் வரை ' யாரும் சர்க்காரை பொங்கலில் கைவைக்க கூடாது ' ! என்று வேறு கட்டளை இட்டான். எனக்கு வேறு நாக்கில் எச்சில் ஊறிக்கொண்டிருக்கிறது.வெள்ளத்தை பாகாக காய்ச்சி அதில் கடலையைப்  போட்டு உருண்டையாக உருட்டி , கடலை உருண்டையையும் தயார் செய்துவிட்டான்.


அருகில் இருந்த செடிகளில் இருந்து இலைகளைப் பறித்து அனைத்தையும் ஒன்றாக தைத்து பெரிய தொன்னை போல் அவன் செய்திருந்த தட்டு அழகானது. அனைவருக்கும் அவனே இலைகளில் சர்க்கரை பொங்கலையும்,கடலை உரு்ண்டையையும் சமமாக பரிமாரினான்.பொங்கலை எடுத்து வாயில் வைத்த போது அது வாயில் இருந்து வழுக்கி , .குடலில் சரிந்து , அடிவயிற்றில் முட்டி நின்று  , கரைந்து கொண்டிருந்தது. அதற்குள் நாக்கு தேவையான ருசியை உரிஞ்சிக்கொண்டு , மூளைக்கு தான் திருப்தி அடைந்த தகவலை அறிவித்துவிட்டது. ' தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் பார்க்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்தத்தி்ற்க்காக சண்டை போட்டதை ' அம்மா கதையாக கூறியிருக்கிறாள்.அந்த அமிர்தம் கண்டிப்பாக இந்த சர்க்கரை பொங்கலைவிடவும் சுவையில் சற்று குறைவாகவே இருந்திருக்க  வேண்டும் ! என்று மனம் கூறியது.


குளத்தில் குளித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.  வீடு நெருங்க தொடங்கிய போது எனக்குள் பயம் தொடங்கியது.காரணம் பாத்திரத்தை மீண்டும் யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைக்க வேண்டும். நண்பர்களிடம் கேட்ட போது ' அய்யா இப்போது உறங்கிதான் ' கொண்டிருப்பார் , அதில் ஒன்றும் அவ்வளவு சிரமம் இருக்காது என்று கூறி சமாதானம் செய்தனர்.

 அவரவர் வீடு வந்ததும் நண்பர் அனைவரும் பிரிந்து சென்றவிட்டனர். கையில் பாத்திரத்துடன் சென்ற எனக்கு அதிர்ச்சி. அய்யா தின்னையில் உட்கார்ந்திருக்கிறார்.வாயில் சுருட்டு புகைந்து கொண்டிருந்தது.  ' என்னிடம் கேட்காமல் ஏன் பணத்தை எடுத்தாய் ? '  என்று அம்மாச்சியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அதை அம்மாச்சி மறுத்துக்கொண்டிருந்தாள்.  இது சரியான நேரம் அல்ல என்று உணர்ந்து பாத்திரத்தை வீட்டின் அருகில் இருந்த புதரில் மறைத்து வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன். அனுமதி பெறாமல் வெளியில் சென்று விளையாடி விட்டு வந்ததற்க்காக என்னை அடிக்க குச்சியை தேடிக்கொண்டிருந்தார் அய்யா. அம்மாச்சி என்னை அவரிடம் இருந்து காப்பாற்றினாள்.


மறுநாள் காலை பாத்திரத்தை புதரில் மறைத்து வைத்த செய்தியையும்  , அந்த இடத்தையும் கூட்டாளியிடம் காட்டினேன். '  இன்று எப்படியும் அய்யா வயலுக்கு சென்றவுடன் வீட்டிற்குள் சென்று சேர்த்துவிடலாம் '  என்று அவன் கூறினான். மாலை நேரம் நினைத்தது போலவே  அய்யா வயலுக்கு சென்றுவிட்டார். பாத்திரத்தை எடுத்து வரலாம் என்று புதருக்குள் சென்றேன். அதிர்ச்சியில் மனம் பதறியது. மறைத்து வைத்த இடத்தில் பாத்திரத்தை காணவில்லை. ஓட்டமும் ,  நடையுமாக நண்பனிடம் சென்று அதை கூறினேன். அவன் எந்த பதற்றமும் இல்லாமல் '  தான் தான் அதை எடுத்ததாக கூறினான் ! '  . நீண்ட பெருமூச்சுடன் அதை தறுமாரு கேட்டேன். அவன் முழிக்கத் தொடங்கினான் ,  வாய் எதையொ மேன்றுகொண்டிருந்தது.சட்டையை பிடித்து உழுக்கியபோது. ' அதை பழைய பாத்திரக் கடையில் போட்டு பேரிச்சம் பழம் வாங்கி விட்டதாகவும் '  , தான் தின்ற பேரிச்சம் பழம்போக மீதியை என்னிடம் நீட்டினான். கோபம்  தலைக்கேறி  ' எதற்க்காக அவ்வாறு செய்தாய்  ? என்று கேட்டதற்க்கு  ' ஒரு வேளை வீட்டிற்குள் எடுத்துச் செல்லும்  போது பிடிபட்டால் நீ மட்டுமல்ல ! அனைவரும் மாட்டிக்கொள்வோம் ! '  அதனால்தான் அவ்வாறு செய்ததாக விளக்கம் அளித்தான். கடையில் சென்று பார்த்தபோது அந்த பாத்திரம் அடித்து நெளிக்கப்பட்டு ஒரு மூலையில் கிடந்தது.


ஒரு சில நாட்கள் கழிந்த நிலையில் மீண்டும் அம்மாச்சிக்கு பாத்திரத்தின் நினைவு வந்து தேட துவங்கினாள்!. தனது ஞாபக மறதியைப் பற்றி தனக்குத் தானே சத்தமாக புலம்பிக் கொண்டே , அடுப்படியில் சமைத்துக் கொண்டிருந்தாள். நான் ஏதும் அறியாதவன் போல அவள் செய்து கொடுத்த பொரி அரிசியை தின்று கொண்டிருந்தேன்.  மேலும் சில நாட்கள் கழிந்த நிலையில் பாத்திரத்தின் நினைவு அம்மாச்சியின் மூளையிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது.


விடுமுறை முடியும்  தருவாயில் அம்மா என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தாள். அய்யா  ' நான் செய்த சேட்டைகளையும் ' , எப்படி இவனை சமாளிக்கிறாய் ? என்றும் வருத்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் . மாலை பேருந்தில் ஊர் செல்ல நானும் அம்மாவும் கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தோம். வரும் வழியில் பழைய பாத்திரக் கடையை கடக்கும் போது , பாத்திரத்தின் நினைவு வந்து திரும்பிப் பார்த்தேன். கடை மூலையில் இப்போது அந்த அலுமினியப் பாத்திரம் இல்லை. பேருந்து கிளம்பியது கூட்டாளிகள் கை அசைத்து  வழியனிப்பினர். அந்த பாத்திரத்தின் நெளிந்த முகம் என் கண்முன் ஒருமுறை தோண்றி எனக்குள் சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தது. அந்த சிரிப்பின் மூலம் நான்  ' முழு  டிக்கேட் ' என்று உலகத்திற்கு தெரிவிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

3 comments:

Unknown said...

Excellent. You got a great story telling talent.
Keep it up :)

கா.பழனியப்பன் said...

Thanks a lot ravi

Mohan said...

படிக்கும்பொழுது காட்சிகள் எல்லாம் கண் முன் தெரிகிறது.அருமை.

Post a Comment