Saturday, August 22, 2009

அண்ணன்,பூந்தி,பலூன்

தூக்க‌த்திலிருந்து எழுந்திருத்த‌ போதுதான் அம்மாச்சி வீட்டில் இருப்ப‌து நினைவுக்கு வ‌ந்த‌து. வீட்டின் முற்றத்திற்க்கு வ‌ந்தேன். அய்யா காவ‌டியை த‌யார் செய்யும் முய‌ற்ச்சியில் இருந்தார். இன்னும் இர‌ண்டு தின‌ங்க‌ளுக்கு எங்க‌ள் ஊரில் திருவிழா. விழா நிமித்த‌மாக‌ நான்,அம்மா,அண்ணன் முன்தினமே ஊர் வ‌ந்துவிட்டோம். ஊரின் ம‌த்தியில் பேருந்திலிருந்து இறங்கி வ‌ரும்போதே நாட‌க‌ம் ந‌டைபெற இருக்கும் மேடையை தயார்செய்து கொண்டிருப்ப‌தை க‌வ‌ணித்தேன். அய்யா இப்போது ம‌யில்தோகைக‌ளை காவ‌டியின் இருபுறத்திலும் க‌ட்டி,ச‌ர்கரை நிறப்பப்பட்ட‌ செம்புகளைகீழேதொங்க‌விட்டு,ப‌ட்டு துணியை காவ‌டியின் மேற்புறம் ப‌ர‌ப்பி க‌ம்பீர‌மாக‌ த‌யார் செய்து இருந்தார். எங்க‌ள் வீட்டில் இர‌ண்டு காவ‌டிக‌ள் உள்ளன. ஒன்றை இர‌வ‌ல் வா‌ங்க‌ உற்வுக்கார‌ர் வந்திருந்தார். நாளையும்,நாளை ம‌றுதின இர‌வும் நாட‌க‌ம் ந‌டைபெற இருப்பதை அவ‌ர் கூறிக்கொண்டிருந்தார். அப்பொதிருந்தே நாட‌க‌த்தை காணவேண்டும் என்ற ஆவ‌ல் ம‌ன‌தில் முல்லைக் கொடிபோன்று ப‌ட‌ர்ந்து மணம் வீச்க்கொண்டிருந்த‌து.

இன்று ம‌தியான‌ம் பூசை போட‌வேண்டும். பூசை என்ப‌து காவ‌டி க‌ட்டியுள்ள அனைத்து வீடுக‌ளிலும் ந‌ட‌த்தப்ப‌ட‌வேண்டிய‌ ச‌ட‌ங்கு. காவ‌டி முன்பு தேங்காய்,பழம்,பூ வைத்து பூசை செய்து க‌ட‌வுளை வ‌ணங்க வேண்டும். பூசை முடிந்த‌பிறகு வீட்டிலுள்ள அனைவ‌ருக்கும் மற்றும் ஊரில் உள்ள இல்லாத‌வ‌ர்க‌ளுக்கும்,ஏழைக‌ளுக்கும் த‌லைவாழை இலை போட்டு சுவையான‌ உணவு ப‌ரிமாறப்ப‌டும். சில‌ர் வீட்டில் வ‌ந்து சாப்பிட்டுவிட்டு செல்வார்க‌ள்.சில‌ர் சாப்பாட்டை கூடையில் வா‌ங்கிச்செல்வார்க‌ள். அம்மாச்சி இல்லையென்று சொல்லாமல் அனைவ‌ருக்கும் உணவு ப‌ரிம‌றுவாள். இது ஒரு ச‌ம‌ப‌ந்தி போஜ‌னத்திற்கு ச‌மமான நிக‌ழ்வு.வீட்டில் உள்ள அனைத்துப் பெண்க‌ளும் பூசைக்கான வேலைக‌ளில் மும்மு‌ர‌மமாக‌ ஈடுப‌ட்டுக்கொண்டிருந்த‌னர். பூசை முடிந்த‌ இர‌வு ஊர்க்காவ‌டிக‌ள் அனைத்தும் குளக்க‌ரையில் உள்ள பிள்ளையா‌ர் கோவிலுக்கு எடுத்துச்சென்று கிட‌த்த‌ப்ப‌டும். இந்த இடத்தில் இருந்துதான் ஊர்காவடிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் புற்ப்படும். பிள்ளையார் கோவில் அமைந்துள்ள இடம் இரண்டு குளங்களுக்கு மத்தி்யில். குளங்களை சுற்றிலும் உயரமான அரசமரங்களும், ஆலமரங்களும் அமைந்திருந்தன. இரு குளங்களிளும் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ஊர் அமைந்திருப்பது அழகான மலை அடிவாரத்தில். இந்த மலை அனுமன் தூக்கிசென்ற சஞ்சீவி மலையிலிருந்து சிதறிய சிறு துண்டு என்று அம்மா கூறியிருக்கிறாள்.

 அதிகாலையிலேயே வீட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. விட்டில் அனைவரும் எழுந்துவிட்டோம். நான் குளித்து முடித்து,காவடி புறப்பாட்டிற்காக காத்து கொண்டிருந்தேன். அம்மா மற்றும் சித்தி அரைமணி நேரமாக அண்ணனை எழுப்பும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அது திருமாலை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சிக்கு சற்று குறைவானது அல்லது அதிகமானது என்றே கூறளாம். அண்ணன் தூங்குவதில் கும்பகர்ணன். கடைசியில் முயற்ச்சி திருவினையாக்கியது. அண்ணன் என்னைவிட மூண்று வயது பெரியவன். இன்று அவன்தான் பிரதான கதாநாயகன். காரணம் காவடியை தூக்கும் வேண்டுதலை அவன்தான் நிறைவேற்றவேண்டும். அன்று அவனை பார்பதற்க்கு பொறமையாக இருந்தது. காரணம் அனைவரின் பாரட்டுதலும்,பாசமும் அவனுக்கே கிடைத்தது . ஊர்காவடிகள் அனைத்தும் புறப்பட்டு மலைப்பாதையை சுற்றிவந்து மலைக்கோவிலை அடைந்தது. மலையை சுற்றிவரும் பக்த்ர்கள் களைப்புதீர ஊர்மக்கள் இலவச மோர்பந்தல்,தண்ணீர்பந்தல் போன்றவற்றை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று அம்மா கூறி்க்கொண்டிருந்தாள். பெரியவனாக வளர்ந்தபிறகு இலவசமாக கலர் வழங்கவேண்டும் என்று அம்மாவிடம் கூறினேன். அம்மா ஆரத்தழுவி முத்தம் கொடுத்தாள். திருவிழா முடிந்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தோம்.

வரும் வழி நேடுகும் கடையும் கடைதெருவுமாக ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. எனது பார்வை பலூன் கடையின் மீதிருந்தது. தேனீக்கள் போல‌ சிறுவர்கள் கடையை மொய்த்துக்கொண்டிருந்தனர். பலூன் வியாபாரி உடல்மெலிந்து,கண்ணம் ஓட்டி இருந்தான். பலூன் ஊதி,ஊதி ஏற்ப்பட்டதால் இருக்கலாம். பலூன் வாங்கவேண்டும் என்ற ஆசையை அம்மாவிடம் தெரிவித்தேன். அம்மா இரவு நாடகம் பார்க்கப் போகும்போது வாங்கித்தறுவதாக கூறி சாமாதானம் செய்தாள். அம்மாவும் நானும் வீடுவந்து சேர்ந்த சற்று நேரம் கழித்து வந்த அண்ணனை பார்ததும் கோபமும்,அழுகையும் வந்தது. காரணம் அவன் கையில் அழகான சிகப்பு பலூன். விசாரித்தபோது சித்தி வாங்கித்தந்ததாகக் கூறி வெறுப்பேற்றினான். பலூன் இப்போதே வேண்டும் என்று அடம் பிடித்ததால் அய்யா பலூன் வாங்கிக்கொடுத்தார். அது மிகவும் பெரியதாகவும்,வடிவத்தில் சற்று வித்தியாசமாகவும் அண்ணணின் பலூனைவிட அழகாக பச்சை நிறத்தில் இருந்ததில் பெருமை எனக்கு. இரவு உணவு முடிந்ததும் நாடகம் பார்க்க வேண்டுமென்ற ஆசையை சித்தியிடம் தெரிவித்தேன். அவளும் இசைந்தாள். இதற்க்கிடையில் அண்ணணின் பலூன் உடைந்துவிடப்படியால் அவன் கழுகுப்பார்வை என் பலூனின் மீது விழுந்தது. பலூனை உத்திரத்தின் மேல் அய்யா பாதுகாப்பாக கட்டி தொங்கவிட்டிருந்தார். பலூனை பார்த்தபடியே கிழே படுத்திருந்தேன். தூக்கம் கண்களை தழுவிக்கொண்டிருந்தது .மனதில் நாடகம் பார்தே ஆகவேண்டும் என்றஆசை உட‌லெங்கும் பரவிக்கிடந்தது.

 ஈரத்தில் படுத்த்திருப்பது போல் உணர்வு வந்ததால்,கண் விழித்துப்பார்தேன். அண்ணன் படுக்கையில் சீறுநீர் கழித்துவிட்டு அந்த உணர்வே இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போதுதான் தெரிந்தது இரவேல்லாம் உற்ங்கிவிட்டு காலையில் கண்விழித்திருக்கிறேன். உத்திரத்தை அண்ணந்து பார்த்தேன்,பலூன் தன் மூச்சை அனைத்தையும் இரவேல்லாம் வெளியேற்றிவிட்டு சிறுத்து மெலிந்திருந்தது,அது பலூன் வியாபாரியை ஒருமுறை நினைவுபடுத்தியது. கோபமாக வந்தது,காரணம் பலூன் அல்ல,நாடகத்தை பார்காமல் தவறவிட்ட ஏமாற்றமே. சித்தியிடம் எழுப்பாததற்கான காரணம் கேட்டபொது,தான் எழுப்பியதாகவும்,சுயநினைவின்றி நான் உறங்கிவிட்டதாகவும் தெரிவித்தாள். இதைக்கேட்டு என்மீதே எனக்கு கோபம் வந்தது. நாடகம் பார்த்த அனுபபத்தை அண்ணன் என்னிடம் சொல்லி, மேலும் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டான். தொடர்ச்சியாக வந்த ஒலிபெருக்கி விள்ம்பரம் இன்று இரவும் நாடகம் நடைபெற இருப்பதாகவும்,நாடகத்தின் பெயர் "அரிச்சந்திர மாயன காண்டம்" என்றும் அறிவித்துக்கொண்டிறுந்தது. இது எனக்கு சற்று ஆறுதலை அளித்தது.

அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி அண்ணன் நாடகம் நடைபெறும் மேடையை காண்பிப்பதற்க்காக எனனை அழைத்துச்சென்றான். அம்மா என்னிடம் கொடுத்த ஒரு ரூபாய் பற்றிய செய்தியை அவனிடம் மறைத்துவிடேன். தனியாக பூந்தி வாங்கி சாப்பிடவேண்டும் என்ற ஆசையே அதற்க்குக் காரணம். ஆச்சரியமாக இருந்தது எனக்கு,இது நான் முந்தினம் பார்த நாடக மேடையிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. நாடக மேடையின் மேற்ப்பரப்பு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதில் பந்து விளையடும் இரு யானைகளின் உருவமும்,பூச்சொரியும் அழகான மங்கையின் உருவமும் மாறி மாறி வந்து ஆச்சர்யத்தை அளித்தது. மேடையின் உட்புறத்திலிருந்த திரை சேலையில் வண்ணமாளிகையின் படம் வரையப்பட்டிருந்தது. பார்ப்பதர்க்கு அசலான மாளிகையைவிடவும் நேர்த்தியா இருந்தது. நாடக நடிகர்கள் அனைவரும் வந்துவிட்டதாகவும்,அவர்கள் ஊர்த்தலைவர் வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளதாகவும் அண்ணனின் கூட்டாளிகள் கூறிக்கொண்டிருந்தார்கள்.அண்ணன் என்க்கு பூந்தியும்,சீனிச்சேவும் வாங்கிக் கொடுத்தான். பாக்கெட்டை தொட்டுப்பார்தேன்,அம்மா கொடுத்த ரூபாய் பத்திரமாக இருந்தது.அண்ணன் என்க்கு இப்போது ராமனாகக் காட்சி அளித்தான்.

இதோ இப்போது நான்,அம்மா,சித்தி, அனைவரும் நாடகமேடையின் முன் அமர்ந்து இருக்கிறோம்.நாடகம் தொடங்கிவிட்டது.ஆரம்பக் காட்சியில் தோன்றிய கோமாளி சேட்டை செய்து அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தான். திடீர் என்று வந்த புகையில் தோன்றிய நாரத முனிவர்,கம்பீரமான் தோற்றத்தில் இருந்த மன்னன் அரிச்சந்திரன், கொண்ட கொள்கைக்காக நாடிழந்து,மனைவி இழந்து,மகனை இழந்து மாயாணத்தை காத்துக் கொண்டிருந்த காட்சிகள் ஆச்சர்யத்தையும்,அழுகையையும் வரவழைத்தது. விடியற்க்காலை ஆறுமணி வரை நாடகம் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது.இபோது நான் எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறேன்.திருவிழா முடிந்தபடியால் மீண்டும் ஊருக்கு கிளம்பி பேருந்தில் சென்றுகொண்டிருக்கிறோம்.இப்போது எனக்கு அழுகை பீறிட்டுவருகிற‌து,கார‌ண‌ம் ப‌ள்ளி வீட்டுப்பாட‌த்தை முடிக்காம‌ல் விட்ட‌து நினைவுக்கு வ‌ந்த‌து.வாத்தியார் குச்சியுட‌ன் தோன்றி என்னை மிர‌ட்டிக்கொண்டிருந்தார்.

3 comments:

Mohan said...

க‌தை அருமையாக‌ இருக்கிறது.

Unknown said...

palani un kathia padithen super kangal mun katchigal oodum alvukku ezhuthu vadivam nalla ezhuthu valam keep writing. ezhuthalar palani endru sollum naaal vegu thoorathil illai

கா.பழனியப்பன் said...

சாகுல் அண்ணா : தங்கள் பாராட்டுக்கு நன்றி.

Post a Comment