Tuesday, August 25, 2009

வீடு

நண்பர் ஒருவருக்கு திருமணம் நிச்ச‌யக்கப்பட்டு இருந்ததால்,திருமண வாழ்வை தொடங்குவதற்காக வாடகை வீடு தேடும்பணியில் ஈடுபட்டிருந்தார். என்னிடமும் அதுபற்றி கூறியிருந்தார். தி‍‍‍‍.நகரில் வீடு வாடகைக்கு இருப்பது பற்றி மற்றொரு நண்பர் மூலம் தெரிந்துகொண்ட நான் , நண்பரை அழைத்துக்கொண்டு வீடு பார்க்கச் சென்றிருந்தேன். வீட்டைப்பார்த்த நண்பர் வீடு பிடிக்கவில்லை என்றும்,வீட்டில் ஒரு மரம் கூட இல்லையென்றும்,மரம் இல்லாத வீட்டில் குடியிருக்க விருப்பம் இல்லை என்றும் கூறினார். இப்போது சென்னையின் ஒதுக்குப்புறமான இடங்களில் வீடு தேடிக்கொண்டிருகக்கிறார்.

என் சொந்த‌ ஊரில் எங்க‌ளுக்கென்று சொந்த‌ வீடு ஒன்று உள்ளது. அதில் அம்மா உருவாக்கிய வேம்பு,கொய்யா,தென்னை ம‌ர‌ங்க‌ள் உள்ளன .ம‌ர‌ங்க‌ள் இல்லாத‌ வீட்டில் வாழ்வது குழந்தைகள் இல்லாத வீட்டில் வாழ்வது போன்ற உணர்வை ஏற்ப்படுத்துவது தவிர்க்கமுடியாததுதான். சொந்த வீடு கட்டி குடியேறும் முன்பு நாங்க‌ள் வ‌சித்த‌து ஒரு வாட‌கை வீடு. சிறிய வீடே என்றாலும் மிக‌வும் அழ‌காக இருக்கும். கூரையில் ஓடு வேய‌ப்ப‌ட்டிருக்கும்.வீட்டை ஒட்டி அழகான கிணறும்,கிணற்றடியை ஒட்டி அழகான த‌ண்ணீர் தொட்டியும்,அதையொட்டி துணி துவைக்க ஏதுவாக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல் மேடையும் உண்டு. கிணற்றடியை சுற்றிலும் அழகான தென்னை ம‌ர‌ங்க‌ளும்,வேப்ப‌ ம‌ர‌ங்க‌ளும் இருந்தன.

கிணற்றடியில் எப்போதும் அணில்க‌ள் விளையாடிக் கொண்டிருக்கும். வெளியில் சென்று விளையாட‌ அனும‌தி இல்லாத அந்த‌ சிறுவ‌ய‌தில் அணில்க‌ளுட‌ன் பேசி விளையா‌டி இருக்கிறேன். சில நேரங்களில் குரங்குகள் வந்து வீட்டின் மேல் காயவைத்திருக்கும் வடகம்,வத்தல் போன்றவற்றை தின்றுகொண்டிருக்கும். அதை நான் பயம் கலந்த உற்ச்சாகத்துடன் பார்த்திருக்கிறேன். அம்மா அதை ராமா,ராமா போய்விடு என்று வணங்கிகொண்டிருப்பாள். ஒரு நாள் கொக்கு ஒன்று இற‌க்கையில் அடிப‌ட்டு ப‌றக்க முடியாம‌ல் கிணற்றடியை சுற்றி சுற்றி வ‌ந்த‌து. அம்மா மஞ்சள் தடவிய துணியை இறக்கையில் சுற்றி,சில நாட்கள் வைத்தியம் பார்த்தாள். அந்த கொக்கின் நிறம் பார்ப்பதற்கு வெண்சங்கை விடவும் வெண்மையாக‌ இருந்தது. இறக்கையில் இருந்த புண் ஆறிய பிறகு கொக்கை பறக்கவிட அம்மா அனுமதித்தாள். இப்போது அந்த கொக்கு உயிருடன் இருந்தால் அந்த கொக்கின் வயது எவ்வளவு இருக்கும்? கொக்கிற்கு எனது முகமும் , அம்மாவின் முகமும் நினைவில் இருக்குமா? என்று அவ்வப்போது மனம் நினைத்துக்கொள்ளும். இந்த வீட்டில் இருந்த போதுதான் எனது வற்புறுத்தலின் காரணமாக அப்பா புது கருப்பு வெள்ளை தொலைக்காட்சி வாங்கித் தந்தார். தொலைக்காட்சி வந்த அன்று பகல் முழுவதும் புதை‌ய‌லை காக்கும் பூத‌ம் போல தொலைக்காட்சியின் அருகிலேயே காத்துக்கிட‌ந்தேன். ஒருநாள் மக்கள்தொகை கணக்கெடுக்க வந்த முதல் வகுப்பு பாமா டீச்சரும் எங்கள் வீட்டிற்குள் வந்து காப்பி குடித்துவிட்டு சென்றிருந்தார். மறுநாள் முழுவதும் அதைப் பற்றியே சக மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அது எனக்கு பெருமையாகவும் இருந்தது.

அம்மாவின் சொந்த‌ வீடு கன‌வு கார‌ணமாக‌ ஊரின் ஒதுக்குப்புறத்தில் ம‌னை வாங்கி வீடுக‌ட்டி குடியேறினோம். வீடு மாற்றும் பொழுது கிணற்றடியில் இருந்த‌ ம‌ண்புழு ஒன்றை தீப்பேட்டியில் அடைத்து புதுவீட்டின் தோட்ட‌த்தில் விட்டேன். இருந்தும் என்னுள் அந்த‌ ப‌ழைய‌ வீட்டின் நினைவு மங்காத‌ ஓளியாக‌வே ஓளி வீசிக்கொண்டிருக்கிறது. அந்த‌ வ‌ய‌தில் தோன்றிய‌ எண்ணமெல்லாம் எனக்கு இர‌ண்டு வீடுக‌ள் உள்ளன என்ப‌தே. தேவைப்ப‌டும் பொழுதெல்லாம் ப‌ழைய‌ வீட்டிற்க்கு வ‌ந்து செல்ல‌லாம் என்றே ந‌ம்பினேன்.

பழைய‌ வீட்டின் நினைவு மனதில் எழும்பொழுதெல்லாம் அந்த‌ தெருவின் வ‌ழியே வீட்டை பார்த்த‌ப‌டியே சென்றிருக்கிறேன். க‌ல்லூரி ப‌டிப்பு நிமித்தமாக‌ வெளியூர் சென்று ப‌டித்துக்கொண்டிருந்த‌ கால‌த்தில்,அவ்வ‌ப்பொழுது ஊர் வ‌ரும்பொழுதெல்லாம் அந்த‌ தெருவின் வ‌ழியெ ஒரு முறையேனும் சென்றுவ‌ருவேன். பல ஆண்டுக‌ள் க‌ழிந்த‌ நிலையில்,பழைய வீட்டின் நினைவு வ‌ந்து வீட்டை பார்க்க‌ சென்றபோது,எங்க‌ள் வீடு இடிக்க‌ப்ட்டு,அது இரு‌ந்த‌ இட‌த்தில் இர‌ண்டு மாடி வீடு க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து. அன்று முழுவ‌தும் ம‌ன‌தில் முள் தைத்த‌து போன்ற உணர்வில் த‌னி அறையில் ப‌டுத்திருந்தேன்.ம‌னதின் வ‌லி மெல்ல க‌ண்ணீராக‌ க‌ரைந்து க‌ண்க‌ளை நிர‌ப்பிக்கொண்டிருந்த‌து. இப்பொழுதெல்லாம் அந்த‌ தெருவின் வ‌ழியே செல்வ‌தை த‌விர்த்தே வ‌ருகிறேன்.



10 comments:

Mohan said...

இந்தப் பதிவைப் படித்தவுடன் எனக்கு 'வீட்டு' ஞாபகம் வந்து விட்டது :-). ரொம்ப நல்லாயிருக்கு.

கா.பழனியப்பன் said...

ந‌ன்றி அண்ணா !

Unknown said...

Surprise !!! Excellent post.... thank you :)

கா.பழனியப்பன் said...

நன்றி ரவி.தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்கவும்.

Unknown said...

palani nalla sinthainai nallla karuthukal unakkul oru eluthana endur viyakiren manithanin thedal intha kanini ugathil therintukolla migavum kadinam nee athai ippothu kandukondullai so keep writting

Unknown said...

palaniyappa un kathaigalai meendum oru murai padikkavendum pol irunthathu so sathnaal than padithen. padithuvittu meendum orumurai intha commments anupugiren. super keep writting. annan poonthi baloon, veedu. ........... thalaipu arumaiyaga ulllathupol kathaium..... i really enjoyed it.

கா.பழனியப்பன் said...

சாகுல் அண்ணா : நன்றிகள்.உங்களின் ஊக்கம் என்னை உற்ச்சாகப்படுத்தியது.நல்ல புனைவுகள்,சிந்தனைகளை படைக்க இது மீண்டும் என்னை தூண்டுகிறது.

ARAVIND said...

good work. never expected this much writing skills from u palani...ungal blog kandaen meghavum nanru...thodaratum... anbudan.. Aravind.

கா.பழனியப்பன் said...

அரவிந் : உன்னுடைய வாழ்த்துகளுக்கு நன்றி

M.L said...

nice machi,
Is that your real story?
write more....

Post a Comment