Tuesday, February 9, 2010

மருதுவும் கலையரசியும்

' இன்னு ஒரு வருசத்துல எனக்கும் படிப்பு முடியிது.இப்பவே அப்பா கல்யாணத் தரகருகிட்ட சொல்லி வச்சுட்டாரு.இன்னும் ஒரு வருசமோ இல்ல ஆறு மாசமோ அதுக்குள்ள பேச்சு இன்னு தீவிரமாயிரு.நீயு ஒன்னோட முடிவ மாத்திக்கிறது மாதிரி தெரியல.படிப்புக்கு அப்புறம் அப்பாவ என்னால சமாளிக்க முடியாது.நீ குமாரண்னே கிட்ட பேசுனிங்களா இல்லையா?' கேள்வி எழுப்பினாள் கலைஅ‌ரசி.மௌனம் காத்தான் மருது.

'நீங்க  இப்படியே இருந்தா வேற எவனவது கல்யாணங் கட்டிக்கிட வருவாக, நானு அவுக பின்னாடி பல்ல யிளிச்சுக்கிட்டுப் போயிருவே அப்படின்னு மட்டு நெனைக்காதிங்க ......'  கண்கசக்கினாள் கலைஅரசி.

'சும்மா எதாவது கற்பன பண்ணிப் பேசத கலை.  டவுனுல போயி எவனுக்கு கீழயாவது கை கட்டிக்கிட்டு  வேலை செய்ய என்னால முடியாது.எந்த வேல செஞ்சாலும் இந்த கிராமத்துலதான்னு முடிவு பண்ணிட்டேன்..எப்படியும் அடுத்த மாசத்துல குமாரு அண்ணே பணம் ஏற்பாடு பண்ணித் தந்துருவாரு.பெறகு அப்பா கிட்ட என்னோட முடிவ சொல்லிருவேன்' ஆறுதல் கூறினான் மருது.

அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தது ஒரு கரிசல் காடு.வாரம் ஒருமுறையேனும் யாருக்கும் தெரியாமல் அவர்கள் இப்படி சந்தித்துக்கொள்வது வாடிக்கை.கலையரசி பெயருக்கேத்த மாதிறி  அழகானவள். கருப்பு நிறம் தான்.நிறமா அழகை முடிவு செய்கிறது?.மிகுந்த புத்திசாலி,அனுசரணையானவள்.யாருக்கும் தீங்கு இழைக்காதவள்.இவர்கள் ஆசைப்படுவது ஒருவருக்கும் தெரியாது.மருதுவின் அம்மாவிற்கு மட்டும் அரசல் புரசலாக தெரியும்.

மருது ஒன்றும் இந்த உலகில்,எந்த இளைஞனுக்கும் குறைந்தவன் அல்ல. மிகுந்த அறிவாளன்.நல்ல தேக ஆரோக்கியம்.முதுகலை பட்டதாரி.படிப்பு முடிந்தவுடனேயே நல்ல கம்பெனிகளில் அவனுக்கு வேலை கிடைத்தது.அதை அனைத்தையும் உதறிவிட்டு அவன் காத்திருப்பது ஒரு இலட்சியத்திற்காக.அவன் மனதிற்குள் அயிரம் ஆசைகள்.மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்.எதன் பின்னாடியோ தேவை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் உலகை தடுத்து நிறுத்த வேண்டும்.அடுத்த தலைமுறைக்கு ஏதாவது செய்ய வேண்டும்.அதற்காக அவன் சற்று காத்திருந்துதான் ஆகவேண்டும்.கலையரசியும் அதற்கு உறுதுணையாய் இருப்பாள்.

கலையரசி மருதுவின் மாமன் மகள் தான்,இருந்தும் வேலை இல்லாத ஒருவனுக்கு பெண் கொடுக்க கலையரசியின் அப்பா ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்.எப்போது இவர்கள் காதல் வயப்பட்டார்கள் என்பது இவர்கள் இருவருக்கும் தெரியாது.இதுவரை இவர்கள் காதலை பரிமாறிக் கொண்டதுமில்லை.வித்திலிருந்து வளரும் மரம் போல அவர்களுக்குள் காதல் தானாகவே வளர ஆரம்பித்தது.

சிறுவயதிலிருந்தே ஒன்றாக விளையாடியவர்கள்.மருது கலையரசிக்கு மூன்று வயது மூத்தவன்.ஒரே பள்ளியில் வேறு வேறு வகுப்பில் படித்தவர்கள்.கலையரசி பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் மருது வீட்டில்தான் இருப்பாள்.மாலை நேரங்களில் மருதுவின்  பொழுதுபோக்கு,தோட்ட வேலைகள் செய்வது.வீட்டின் கொல்லையில் அழகான தோட்டம் தயார் செய்திருந்தான்.அந்த தோட்டத்தின் வளர்ச்சியில் கலையரசியின் பங்கும் இருந்தது. வீட்டின் தேவைக்கு அந்த தோட்டத்திலிருந்தேதான் காய்கறிகள் பறிக்கப்படும்.அவர்கள் நட்பின் சான்றாக அவர்கள் உருவாக்கிய மாமரம் இன்றும் வருடம் தவறாமல் காய்த்துக்கொண்டிருக்கிறது.

மருதுவின்  வீட்டில் கால்நடைகளுக்குப் பஞ்சமில்லை.ஆடுகளைப் பட்டியில் அடைப்பது,மாடுகளுக்கு கழனி காட்டுவது,கோழிகளை பஞ்சாரத்தில் அடைப்பது போன்ற அனைத்து வேலைகளிலும் அத்தைக்கு உதவினாள் கலையரசி.

பள்ளிப் பிராயத்தில் மருது ஆடு ஒன்றை வளர்த்து வந்தான்.அதன் பெயர் கருப்பன் .ஒரு நாள் அம்மை நோய் கண்டு கருப்பன் இறந்துவிட்டான்.கலையரசி அழுது புறண்டுவிட்டாள்.கருப்பனை வீட்டின் பின்புறத்தில் புதைத்து அதன் மீது மருதாணிச் செடி ஒன்றை நட்டுவைத்தான் மருது.அதை தண்ணீர் விட்டு வளர்த்தாள் கலையரசி.இப்போதும் கலையரசியின் கைகள் சிவக்கும் போது அவர்கள் கருப்பனை நினைக்கத் தவறுவதில்லை.

மருதுவின் குடும்பம் ஒரு சம்சாரி குடும்பம்.அப்பா மாயண்டி அம்மா நாச்சியார்,தங்கை வள்ளி என அளவான குடும்பம்.மாயண்டிக்கு தொழில் வெள்ளாமை.அவருக்கென சொந்த நிலங்கள் இருந்தன.அதில் வெள்ளாமை செய்து வரும் வருமானத்தில் தான் மருதுவை படிக்கப் வைத்தார்.வள்ளியை நல்ல இடத்தில் கல்யாணமும் முடித்து வைத்தார். இரண்டு ஆண்டுகளாக வானம் பார்த்த பூமி ஆகிவிட்டது.வெள்ளாமை இல்லை.வெள்ளாமைக்கு வாங்கிய கடனும் அடைத்தபாடில்லை.வயதும் ஆகிவிட்டது மாயாண்டிக்கு.மருதுவை நம்பியிருந்தது குடும்பம்.

'கொஞ்சப் பணம் குமார் அண்ணே கிட்ட வாங்கியிருக்கே.அத வச்சு  மேற்கால நம்ம எடத்துல கெணறு ஒன்னு தோண்டி கிடப்புல கெடக்குற வெள்ளாமைய தொடங்கலான்னு இருக்கே'  மாயாண்டியிடம் கூறினான் மருது.

' நாந்தே கடைசி வரைக்கும் இந்த செம்மண்னுல பொறண்டு பொழப்பு நடத்துனேன்னு பாத்தா நீயு ஆரம்புச்சுட்டியா.இந்த மண்ணோட ராசியப்படி. யாரையும் விடாது . ம்ம்.. விருப்பம் போல செய்யி '   அரைமனதுடன் சம்மதித்தார் மாயாண்டி

மாயாண்டி மருதுவிடம் சலிப்பாகக் கூறினாலும் மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தார்.தன்னோட இந்த நிலம் தருசாகிவிடும் என்ற நினைப்பில் இருந்த மாயாண்டிக்கு இது பெரிய ஆறுதல் அளித்தது.தன் தாத்தன் முப்பாட்டன் எல்லாருக்குச் சோறு போட்ட நிலம் தன் மகனை மட்டும் அம்போனு விட்டுறுமா என்ன?என்று நம்பினார் மாயாண்டி.

' நேத்து வேளான்மை கழக ஆசிரியரை கூட்டியாந்து காட்டுனேன் அவரு இந்த எடத்துல நல்ல நீரோட்டம் இருக்குறதா சொன்னாரு.நாளைக்கு நல்ல நாள்.பூசைய  போட்டு வேலையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான். கெணறு வெட்றதுக்கு ஆளுங்கள வரச்சொல்லி இருக்கேன்' குமார் சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தான் மருது.

இருவரும்  நின்று பேசிக்கொண்டிருந்த இடம் வயக்காட்டின் மேற்குப்புறம்.குமார் பள்ளி ஆசிரியர்.வருங்கால உலகத்தை செம்மைப்படுத்த இளைஞர்களால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு.வெறும் நம்பிக்கை மட்டுமல்ல அதற்கான சில வேலைகளையும் செய்துவந்தான்.

மதுரை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் குமாருக்கு தெரிந்த பேராசிரியர் ஒருவர் இருந்தார்.அவர் மூலம் மாதம் ஒருமுறை வேளாண்மைப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தான் குமார்.அதில் பங்குகொள்ள மருதும்,இன்னும் சில சுற்றுவட்டார இளைஞர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

'இந்த மண் மாதிரியே வேளாண்மை ஆரய்ச்சி கழகத்தில கொடுத்துருங்கண்ணே.சோதனை முடிவை நாளைக்கு போயி நா வாங்கிக்கிறே' சுருக்கு பையில் ஒரு பிடி வயல் மண்ணை குமாரிடம் எடுத்துக் கொடுத்து கூறினான் மருது.

கரிசல் காடு  :

' நம்ம நெனச்ச அளவுக்கு நிலத்தடி நீர் இல்ல. கெணத்து தண்ணிய மட்டும் நம்பியிருக்க முடியாது.எப்படியு கொஞ்ச நாளைக்கு பெறகு  மழையத்தான் நம்பி ஆகணும்' வருத்தப்பட்டான் மருது.

' கவலப்படாத எப்படியும் இந்த வருசம் நல்ல மழ பெய்யும். அய்யனாருக்கு நேந்து இருக்கே அந்த சாமி நம்ம கைவிடாது.ஒன்னோட நல்ல மனசுக்கு ஒரு கொறையும் வராது ' ஆறுதல் கூறினாள் கலையரசி

காதலியின் வார்தைகள் நம்பிக்கை ஊட்டின அவனுக்கு.

இயற்கையின் மீது பாரத்தை போட்டு வேலையை ஆரம்பித்தான் மருது.மாயாண்டியும் நம்பிக்கை கொடுத்தார்.அவரின் பழுத்த அனுபவம் கண்டிப்பாக மருதுவிற்கு கைகொடுக்கும்.எங்கே பழமையும் புதுமையும் கைகோர்க்கிறதோ அந்த இடத்தில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தானே?

மருதுவும் மாயாண்டியும் வயலை உழுவதற்கான பணியில் இறங்கினர்.அப்போது அவர்கள் ஒரு முடிவு கட்டிக்கொண்டனர் அது' இயற்கை உரங்களைத் தவிர மற்ற எதையும் பயன்படுத்தக்கூடாது'என்பது.

வயலின் ஒருபுறத்தில் பாத்திகட்டி,வேளாண் கழகத்திலுருந்து வாங்கி வந்த விதை நெல்லைத் தூவி நாத்துகள் வளர ஏற்பாடு செய்திருந்தான் மருது.ஒரு வாரத்தில் நனறாக நாத்து பிடித்துவிட்டது.நாத்து வளர்ந்திருந்த விதம் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது.இன்னும் இருபது நாளில் நாத்துக்கள் புடுங்கி நடவேண்டும்.

குமார் நடுவைக்கு ஆட்கள் ஏற்பாடு செய்திருந்தான்.ஒரு வாரம் முழுவதும் நடுவை பணி நடந்தது.மருது வயலுக்கு கலையரசியை அழைத்து வந்து காட்டினான்.அவர்கள் வாழ்க்கையில் சரியான நேர்க்கோட்டில்
பயணிப்பது போன்று உணர்ந்தார்கள்.கண்கலங்கியே விட்டாள் கலையரசி.அவளை மார்போடு அணைத்துக்கொண்டான் மருது .

பத்து நாட்களில் நாத்து நன்றாக வளர்ந்திருந்தது.இன்னும் பதினைந்து நாட்களில் நாத்து பால்விட ஆரம்பித்துவிடும்.மருதுவிற்கு கவலை தொடங்க ஆரம்பித்தது.கிணற்றில் இருக்கும் தண்ணீர் இன்னும் ஏழு நாட்களுக்கே வரும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தான்.மழைக்காக ஏங்க ஆரம்பித்தான் மருது.

மாயாண்டி வெள்ளாமை செய்துகொண்டிருந்த போதும் இது போன்ற பல சந்தர்ப்பத்தை கடந்து வந்திருக்கிறார்.அவரும் மருதுவைப் போல் வருத்தப்படத்தான் செய்திருப்பார்.ஆனால் அதை எதையுமே மாயாண்டி வெளிக்காட்டியது இல்லை.ஆனால் மருதுவால் அப்படி இருக்க முடியவில்லை.அப்பாவிடம் சென்று அழுதுவிட்டான்.

'கவலப்படாத எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாளைக்குள்ள மழை வரும்யா ' மாயாண்டி கூறினார்.அவரின் அனுபவ வார்த்தைகளை நம்பினான் மருது.

கலையரசி தனது வீட்டில் அம்மாவிற்கு ஒத்தாசையாக இருந்த மாலை நேரத்தில் மண்வாசனை வருவதை உணர்ந்தாள்.செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு மொட்டை மாடிக்கு ஓடினாள்.மேகம் இருண்டு கொண்டு இருந்தது.கிழக்கிலிருந்து மழை ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தது.மகிழ்ச்சியில் இதை தெரிவிக்க மருது வீட்டிற்கு ஓடினாள்.மழை அவளைத் துரத்திக்கொண்டு வந்தது.மருதுவும் இதே உணர்வோடு கலையரசி வீடு நோக்கி ஓடினான்.இருவரும் சந்தித்துக்கொண்ட அந்த தருணத்தில் மழை இருவரையும் நனைத்து விட்டு மேற்கு நோக்கிப் பயணித்தது.இரண்டு நாட்கள் ஊரில் நல்ல மழை.

பெய்த மழையால் ஊற்று ஊறி கிணத்திலும் தண்ணீர் வரத்து அதிகமானது.பெய்த மழையின் ஈரப்பதமே அறுவடை வரைக்கும் தாங்கும். நாத்தில் இப்போது கதிர் பிடிக்க ஆரம்பித்தது.வயலின் ஒரு புறத்தில் பரண் அமைத்து காவல் காக்கத் தொடங்கினான் மருது.பகல் இரவு பார்க்காமல் வயலிலேயே கிடந்தான் .இரவில் அவனை மார்கழி குளிர் வாட்டியது.அப்போதெல்லாம் கலையரசியின் நினைவிலேயே மூழ்கிக் கிடந்தான்.அறுப்பு முடிந்தவுடன் குமாரை விட்டுக் கலையரசியின் அப்பாவிடம் பெண் கேட்பது என்று மனதிற்குள் முடிவு கட்டிக்கொண்டான் .

அவன் கண் எதிரிலேயே கதிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்துவிட்டது.கதிரைப்பார்த்ததும் அவனுக்கு,பட்ட சிரமம் எல்லாம் சாதாரணமாகப் பட்டது.அவன் வானத்தைப் பார்த்து கத்தி கும்மாளமிட்டான்.ஒவ்வொரு கதிராக எடுத்து உற்றுப்பார்த்தான்.மனிதன் முயற்சியும்,நம்பிக்கையும் வைத்தால் எல்லாம் சாத்தியம் தானே !.மனதிற்குள் மகிழ்ந்தான்.இந்த அறுப்பிலிருந்து அவனுக்கு கிடைக்கப் போவது சிறிய வருமானம் மட்டுமே.அதற்குள் அவனால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடியும்.அதற்கான பக்குவம் அவனிடம் இருந்தது.

வேளண்மை கழகப் பேரசியரும்,குமாரும் வயலை பார்வையிட்டனர்.இன்னும் இரண்டு நாட்களில் கதிர் அறுத்துவிடலாம் என்று பேராசிரியர் அறிவுரை கூறினார்.மருது கண்கலங்கியபடி குமாரை ஆரத்தழுவிக் கொண்டான்.மருது இருவரையும் வழி அனுப்பிவிட்டு வேகமாக கரிசல் காடு நோக்கி ஓடினான்.

மருது தான் உயர்ந்ததோடு மட்டுமில்லாமல் பல இளைஞர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தான்.இன்னும் சில காலங்களில் மருதுவின் கிராமம் நாட்டின் முற்போக்குக் கிராமமாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.கலையரசியின் அப்பாவால் இப்போது இருவரின் காதலுக்கும் கண்டிப்பாக மறுப்பு தெரிவிக்க முடியாது.குமாருக்கு இப்பொதொல்லாம்

' உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
 தொழுதுண்டு பின்செல் பவர் '
  எனும் குறளைப் படிக்கும் போது மருதுவை நினைக்காமல் இருக்க முடிவதில்லை.