Tuesday, September 22, 2009

செகப்பி

தேனி  பேருந்து நிலையத்தில் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. மக்கள் எல்லோரும் பரபரப்புடன் அலைந்துகொண்டிருப்பார்கள். தென் தமிழ்நாட்டிலேயே தேனியில் தான் மிகப்பெரிய சந்தை இருக்கிறது.
 அதிகாலை இரண்டுமணிக்கே சுற்றிய்ள்ள கிராமத்தில் இருந்து விவசாயிகள் காய்கறி,பூ,தேங்காய்,ஏலக்காய் போன்ற சரக்குகளை வியாபரத்திற்காக கொண்டுவந்து இறக்கி பரபரப்பை தொடங்கிவைப்பார்கள்.இந்த பரபரப்பை அடங்காமல் பார்த்துக்கொள்வது இவர்களுக்கு அடுத்த படியாக வரும் அலுவலக பணியாளர்களும்,பள்ளி கால்லூரி மாணவ‌ர்களும்.இவர்களிடம் இருந்து பரபரப்பு உள்ளூர்,வெளியூர் பயணிகளிடம் தொற்றிக்கொள்ளும்.இளவட்டங்கள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வரை இந்த பரபரப்பு அடங்காது.பேருந்து நிலையத்தை சுற்றிலும் உணவு விடுதியும்,டீ கடைகளும் நாள் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும்.

தேனி எனக்கொன்றும் புதிய ஊர் அல்ல. எனது கல்லூரி நாட்களில் பெரும்பாலான பொழுதுகள் தேனியிலும்,அதை சுற்றியுள்ள அழகான கிராமங்களிலும்,திரை அரங்கங்களிலுமே கழிந்தது. மதுரையின் அருகில் தேனி அமைந்திருந்தாலும் இங்கு பேசப்படும் தமிழ் மதுரை தமிழில் இருந்து சற்று வித்தியாசமானது. கேட்பதற்கும்,பேசுவதற்கும் மகிழ்சியாக இருக்கும்.  வழக்கமாக டீ அருந்தும் கடையில் டீ அருந்திக்கொண்டு நண்பருக்காக காத்துக்கொண்டிருந்தேன். சாரல் அடித்துக்கொண்டிருந்தது. நண்பரும் பேசியபடி குறித்த நேரத்தில் வந்துவிட்டார். அங்கிருந்து பார்கும்பொழுதே மூணாரின் எழில்மிகு தொற்றம் தெரிந்தது. மலையின் உச்சியை மேகக்கூட்டங்கள் முத்தமிட்டுக்கொண்டிருந்தது. அந்த மலையின் உச்சிக்குத்தான் பயணம் போகிறோம் என்று நினைக்கும்போதே மனதில் உற்ச்சாகம் தோற்றிக்கொண்டது. கல்லூரி நாட்களில் பலமுறை மூணாறு செல்ல முயற்சி செய்தும் முடியவில்லை.இப்போதுதான் அதற்கான தருனம் வாய்த்தது.

பேருந்து போடியை கடந்து மூணாறு மலையில் மெல்ல ஏறத் தொடங்கியது. எங்களுடன் மலையில் தோட்ட வேலை செய்யும் பலரும் பயணம் செய்தனர். அவர்களை பார்கும்போது பெருமையாக இருந்தது.அவர்கள் மெலிந்த தேற்றத்துடன் இருந்தாலும் நல்ல ஆரொக்கியத்துடன் இருந்தனர். அவர்களின் கால்கள் நல்ல வலுவேறி இருந்தது. மலையின் மீது ஏறி இறங்குவதல் வந்த நன்மை அது. மலை மாடிகளைப்போன்று தரையில் இருந்து சட்டேன்று தொன்றிவிடுவதில்லை. தரையிலிருந்து  மலை ஆரம்பிக்கும் இடத்தை பார்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். அந்த பிரம்மாண்டமான மலை ஆரம்பிக்கும் இடம் எந்த சலணமும் இன்றி அமைதியாக இருந்தது. அதைச் சுற்றிலும் மாமரத் தோப்பும்,முருங்கைத் தோட்டமும் இருந்தது. அதுவரை பெரிதாகத் தோன்றிய வீடுகளும்,கட்டிடங்களும்,தெருக்

களும் சிறியதாக மாறத் தொடங்கின. போடியையும் அதை சுற்றியுள்ள சிறிய ஊர்களையும் பார்பதற்கு அழகாக இருந்தது. பலதடவை போடிக்கு வந்து சென்றிருந்தாலும் இப்போதுதான் அதன் மற்றுமொரு புதிய முகத்தை பார்கிறேன். எனது கைகளுக்குள் ஊரையே அடக்கிவிடலாம் போன்று இருந்தது.அந்த உயரமான இடத்திலிருந்து எங்கள் பயணம் தொடங்கிய புள்ளியை நண்பரும் நானும் தேடத் தொடங்கினோம். `

மூணரை அடந்ததுமே கூதல் காற்று மெல்ல தழுவ தொடங்கியது. அந்த தழுவலில் என்னை நான் மறந்து கிரங்க ஆரம்பித்தேன். இயற்கையின் கரங்களில் மெல்ல என்னை ஒப்படைத்தேன். மூணாரில் நாங்கள் தங்குவதற்கு தேர்ந்தெடுத்த இடம் ஒரு அழகான விடுதி.அந்த விடுதி அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருந்தது.அந்த இடத்தில் தங்குவதின் மூலம் இயற்கையுடன் நேருங்க முடியும் என்பது நண்பரின் கூற்று. அந்த விடுதியில் வேலை செய்யும் மூன்று பேரைத் தவிர நாங்கள் இருவர் மட்டுமே தங்கி இருந்தோம். விடுதியின் பின்புறத்தில் அழகான அருவியும், அருவியில் வெள்ளமும் ஓடிக்கொண்டிருந்தது.  இரவு முழுவதும் அருவியின் சத்தம் இனிமையாக கேட்டுக்கொண்டிருந்தது. உலகில் தாலாட்டிற்குப் பிறகு அருமையான இசை தண்ணீர் ஓடும் சத்தம்தான்.

அதிகாலையிலேயே எழுந்துகொண்டோம். காடு காண வெளியில் புறப்பட்டோம்.  அது அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் காட்டு விலங்களின் நடமாட்டம் இருக்கும் என்று விடுதி ஊழியர்கள் எச்சரித்தே அனுப்பினர்.  தூரல் மெல்ல தொடங்கியிருந்தது. மலைகளில் சூரியன் எப்போதுமே ஒரு சோம்பேறி. தனது பணியை தாமதமாக தொடங்கி விரைவாக முடித்துக்கொள்வான். குளிரில் உடல் நடுங்கியது. இரண்டு கைகளையும்  வேகமாக உர‌சி கதகதப்பை ஏற்படுத்திக்கொண்டேன். கதைக்கும் போது வாயில் இருந்து பனி புகையாக‌ வெளியேறிக்கொண்டிருந்தது. வனம் தந்த உற்சாகத்தில் நண்பரும் நானும் பால்ய கதைகளையும்,கல்லூரி  காலங்களின் நினைவுகளையும், எதிர்கால திட்டங்களை பற்றியும் கதைத்துக்கொண்டே வேகுதூரம் நடந்து வந்துவிட்டோம். சுயநினைவு வந்து விடுதிக்கு திரும்பலாம் என்று முடிவு செய்து திரும்பும் போது எங்கிருந்தோ வந்த ' மே ....மே..... ' என்ற குரல் எங்களை தடுத்து நிறுத்தியது. அந்த குரல் எங்கிருந்து வருகிறது என்று தெரிந்துகொள்ளவே சற்று நேரம் பிடித்தது .அந்த குரல் ஆட்டின் குரல்.அது கருப்பு நிறத்தில் இருந்த வெள்ளாடு.

ஆடு மலையின் ஆபத்தான சரிவில் நின்றுகொண்டிருந்தது.அதன் கழுத்தில் இருந்த கயிறு புதரில் சிக்கிக்கொண்டது. அந்த சிக்கலில் இருந்து ஆட்டால் தன்னை விடுவித்து கொள்ளமுடியவில்லை என்பது சிறுது நேரம் கழித்தே எங்களுக்கு தெரிந்தது. இறங்கி உதவி செய்யலாம் என்று காலை எடுத்து இரண்டடி வைத்ததுமே மண் சரிய தொடங்கி அதிலிருந்த பாறையின் சிறிய தூண்டு ஒன்று உருண்டு ஒடி அதலபாதாளத்தில் சென்று விழுந்தது.இது சரியான முய‌ற்ச்சி அல்ல என்று முடிவுசெய்தோம்.மழையும் இப்போது பெரிதாக பெய்யத்தொடங்கியது.ஒதுங்கி நிற்பதற்கும் இடம் ஏதும் இல்லை.அருகில் உதவிக்கு மனிதர்கள் யாரும் இல்லை ஒரு இரட்டைவால் குருவியைத்தவிர.சிறியதும் பெரியதுமாக கற்கலை எடுத்து புதரின் மீது எரியத்தொடங்கினோம்.கல் ஆட்டின் மீது படாமல் பார்த்துக்கொண்டோம். நினைத்ததுபோலஆடு மிரண்டு ஒட முயற்ச்சி செய்தது.இருந்தும் அந்த கயிறு புதரில் இருந்து விடுபடவில்லை.இந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.இரட்டைவால் குருவியும் பறந்து சென்ருவிட்டது.மழையில் நாங்கள் முழுவதுமாக நனைந்துவிட்டோம்.வேறு வழி தெரியாத நிலையில் அந்த இடத்தை விட்டு நகரத்தொடங்கினோம்.இதை உணர்ந்த ஆடு மேலும் உரத்த குரலில் கதரியது.அதன் குரலிள் என்னை விட்டுவிட்டு போகாதீர்கள் என்று செல்வது நன்றாகப் புரிந்தது.விடுதியை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினோம்.

எனது சிறுவயதில் எங்கள் வீட்டில் நிறைய மாடுகளும்,ஆடுகளும் இருந்தன. அதில் ஒரு ஆட்டின் வயிரு பெரிதாக இருந்தது. அது பற்றி அம்மாவிடம் கேட்டபோது அது சினையாக இருப்பதாகவும்,அதன் வயிற்றில் குட்டி ஆடு ஒன்று வளர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தாள். சில வாரங்கள் நகர்ந்த நிலையில் அந்த ஆடு திடீர் என்று உயிர் போகும் விதமாக அலரத்தொடங்கியது. வீட்டில் உள்ள பெரியவர்கள் பரபரப்பு அடைந்தனர். சில நிமிடங்களில் அதன் பின்புறத்திலிருந்து இரண்டு கால்கள் வெளிப்படதொடங்கின. ஆடு வலியில் துடித்தது கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. ஆடு இறந்து விட போய்கிறது என்றே நினைத்தேன். அம்மா காலை மெல்ல வெளியில் இழுத்தாள். சற்றேன்று குட்டி ஆடு ஒன்று வ்ந்து தரையில் விழுந்தது.ஒரு உயிரிலிருந்து இன்னோரு உயிரை உருகி எடுத்தது  அதிசியமாக இருந்தது .தாய் ஆட்டின் கண்களில் இப்போது நீர் வழியத்தொடங்கியது. அதன் கண்கள் அமைதிகொண்டன. மந்தை முழுவதும் இரத்தமும்,சதையுமாக இருந்தது. ஆடு மெல்ல குட்டியை நாக்கால் நக்கி சுத்தம் செய்யத்தொடங்கியது.குட்டி மெதுவாக கண்முழித்து உலகைப் பார்தது.அது தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யத்தொடங்கியது.

குட்டிக்கு  ' செகப்பி ' என்று பெயர் சூட்டினோம். செகப்பி எப்போதும் துள்ளிக் குதிக்கும். தாயின் மடுவில் பால் குடிக்கும். செகப்பியுடன் விளையாடுவது அலாதியானது . ஆடுகள் மற்ற பிராணிகள் போல் அல்லாமல் மிகவும் அமைதியானது .எதற்கும் எதிர்ப்பு தெரிவப்பதில்லை. ஒரு நாள் தாய் ஆடு திடீர் என்று பாம்பு கடித்து இறந்துவிட்டது. தாயை பிரிந்த செகப்பி துடித்துவிட்டாள். அதன் உற்சாகம் குறையத்தொடங்கியது. பால்மட்டுமே அருந்தும் நிலையில் இருந்த செகப்பியை வளர்பதில் சிரமம் எற்பட தொடங்கியது. அம்மா புட்டி பால் கொடுத்து அதை வளர்த்தாள்.தாயை பிரிந்து வாடும் செகப்பியை என்ன சொல்லி தேற்றுவது ?.எப்போதும் செகப்பியை என்மடியில் வைத்து கொச்சிக்கொண்டிருந்தேன்.அவ்வாரு செய்தால் செவலை குட்டியாக போய்விடும் என்று பெரியவர்கள் கண்டித்தனர்.எங்கள் அரவைனைப்பில் செகப்பி பெரியவளாக வளர்ந்தாள். இரண்டு குட்டியையும் ஈன்று தாயும் ஆனாள்.இருந்தும் செகப்பியின் முகத்தில் கடைசிவரை தாயை பிர்ந்த சோகம் மாறவே இல்லை.மந்தையில் சக ஆடுகளுடன் சேராமல் தனிமையிலேயே தன் வாழ்நாளை கழித்தாள்.
செகப்பியின் நினைவு இபோது ஏன் வந்தது என்று தெரியவில்லை.  அவள் நினைவுட‌னே விடுதிக்கு திருப்பினேன். குளித்துவிட்டு படகு சாவாரி செய்யும் நிமித்தமாக ஏரிக்கு புறப்பட்டு சென்று விட்டோம். இருந்ததும் புதரில் சிக்கிக்கொண்ட ஆட்டின் கதரல்  காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.


படகு சவாரியை முடித்துவிட்டு அங்கிருந்த பச்சைப் பள்ளதாக்குகளில் நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தோம். எங்கு காணினும் பச்சையும் ஈரமுமாக இருந்த மூணாரில் எங்கள் மீதும் பச்சையும் ஈரமும் பாசி  போல படியத்தொடங்கியது. எனக்கு பழக்கப் பட்ட மேகங்கள் அனைத்தும் என் தலைக்கு மேலேயே இருந்தன. மூணாரில் மேகங்கள் என் காலுக்கு கீழேயும்,தலைக்கு மேலேயும் இருந்தது.  இரண்டுக்கும் இடையே நானும் மெல்ல உருகி புகையாக மாறி இரண்டு அடுக்குகளையும் இணைத்தேன்.நான்கு நாட்களும் சோலையில் சுற்றுவதுமாகவும்,அருவியை காண்பதுமாகவும்,தேயிலை தோட்டங்களை ரசிப்பதுமாகவும் நகர்ந்து விட்டது.

 ஊர் திரும்பு வதற்காக பேருந்தில் அமர்ந்திருந்தேன். வயதான பெரியவர் ஒருவர் கையில் ஆட்டுக்குட்டியுடன் ஏறி என் இருக்கையின் அருகில் அமர்ந்துகொண்டார். எங்கே செல்கிறீர்கள் என்று ? கேட்டபோது அருகாமையில் உள்ள தனது மகளின் வீட்டிற்க்கு செல்வதாக தெரிவித்துவிட்டு கைப்பையில் இருந்த புட்டியை எடுத்து குட்டிக்கு பாலை புகுத்த தொடங்கினார். ஏன் புட்டிப் பால் ? என்று கேட்டேன். மேய்ச்சலுக்கு சென்ற தாய் ஆடு  வீடுதிரும்பவில்லை என்றும், மூன்று தினங்களும் காடு கரை அனைத்திலும் தேடிவிட்டதாகவும் ஆடு கிடைக்கவில்லை என்றும், கிடைத்தது அதன் கழுத்தில் அணிந்திருந்த கயிறு மட்டுமே என்றும்,ஏதாவது காட்டு விலங்குகள் அடித்திருக்கும் என்றும் கூறினார்.

தனது முதுமை காரணமாக குட்டியை வைத்து வளர்பதில் சிரமம் இருப்பதால் தன் மகளிடம் சென்று சேர்த்துவிட்டால் சிரத்தை எடுத்து  வளர்துவிடுவாள் என்றும் கூறினார். குட்டி ஆடு ' மே....மே..... 'என்று கதறியது.பேருந்து முழுவதும் அதன் கதரல் எதிரோலித்தது.அதன் நாக்குகள் துடிதுடித்தது.

அன்று நாங்கள் மட்டும் சற்று சிரத்தை எடுத்து புதரின் பிடியில் இருந்து அந்த ஆட்டை விடுவித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. குற்றஉணர்சியில் புழு போல நேளிந்தேன். எனது இயலாமையையும்,பொருப்பற்ற தன்மையையும் நினைத்த போது முள் இருக்கையில் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தேன். பேச்சு வரவில்லை,கண்கள் கலங்கி இமைகளின் விழும்பில் கண்ணீர் தேங்கி நின்றது. பெரியவர் பார்த்து விடக்கூடாது என்று கைகளால் துடைத்துக்கொண்டேன். குட்டி அலரி அலரி சி(ஜீ)வன் செத்து அமைதியாகா என்னைப் பார்த்து கொண்டிருந்தது.

மற்றுமொறு செகப்பியாக வளரப்போகும் இந்த குட்டியின் வாழ்கை  என்னை பயமுறுத்தியது .என்னால் தொடர்ந்து அந்த இருக்கையில் அமரமுடியாததால் வேகமாக எழுந்து  திரும்பிப் பார்க்காமல் சென்று ஓட்டுனர் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.பேருந்து மெல்ல மூணாரில் இருந்து இறங்கியது.ஓட்டுனர் மூணாறு பயணம் எப்படி இருந்தது ?  என்றுகேட்டார்.என்ன பதில் சொல்வது ? என்று எனக்கு தெரியவில்லை.பேருந்து புழுதியை கிளப்பிக்கொண்டு தேனியை நோக்கி பயணமானது.

3 comments:

Mohan said...

பதிவு மிக அருமையாக வந்திருக்கு.ஆனால்,என்னோட கவலையெல்லாம்,பஸ்ஸில பார்த்த குட்டி ஆட்டோட அம்மாதான் காட்டில மாட்டின ஆடா இருக்கனும்.இல்லையென்றால் இரண்டு செகப்பி உருவாயிருப்பாங்க.

கா.பழனியப்பன் said...

நானும் அவ்வாறே நம்புகிறேன்.

ARAVIND said...

ok palani, when ur going to put new articles?? new release for deepavali..awaiting in eager for ur new updates...

regards,
aravind

Post a Comment